×

அறுபடை முருகன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: சென்னை பூங்காநகர் கந்தகோட்டம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசாமி கோயிலில், அறுபடை முருகன் கோயில்களுக்கு செல்லக்கூடிய இலவச ஆன்மீக சுற்றுப்பயண தொடக்க விழா இன்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து சுற்றுப்பயணத்தை தொடங்கிவைத்தார். இதில், இணையதளம் மூலம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு விண்ணப்பித்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை முருகனின் திருக்கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ப்படுகின்றனர்.சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள 207 மூத்த குடிமக்களுக்கு போர்வை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி சுற்றுப்பயணத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்..

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பழனி முருகன் கோயிலில் 90 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. இதுவரை 401 திருக்கோயில்களில் 731 கோடியே 40 லட்சம் செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆன்மீக சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாக 60 வயதை கடந்தவர்கள் ஒரே பயணத்தில் பல்வேறு கோயில்களை தரிசிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவியுடன் பயணம் செல்லக்கூடிய அவர்களுக்கு ஒரு பையுடன் மருந்துகள், போர்வை மற்றும் பயணத்துக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு வரும் 31ம்தேதி முதல்கட்டமாக 300 பேர் காசி, ராமேஸ்வரத்துக்கு சுற்றுலாப்பயணத்தை தொடங்க உள்ளனர். இதையும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கிவைக்க இருக்கிறோம். இன்றைக்கு 207 பேர் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அறுபடை வீடு கோயில்களில் ₹599.50 கோடி செலவில் 238 திருப்பணி நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சனை சீட்டு விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கேட்கிறீர்கள். அறுபடை வீடு இல்லாத 10 கோயில்களில் 103 பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு எல்லா கோயில்களிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரார்த்தனை டிக்கெட்களும் கணினியில் ஏற்றப்படுகிறது. ஒரு நாளைக்கு எத்தனை விஷயங்கள் நடக்கிறது என்பதை முழுவதுமாக கணினியில் ஏற்றப்படுகிறது. சிறிதளவும் தவறு நடப்பதற்கு வாய்ப்பில்லை, இருந்தாலும் புகார் எழுந்தவுடன் அதுகுறித்து விசாரிக்க சொல்லி இருந்தோம். துறையினுடைய இணை ஆணையாளர் செல்லதுரை அப்படி எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என சொல்லி இருக்கிறார்.

இதுகுறித்து விவரமாக கோயில் இணை ஆணையரையே இன்றைக்கு ஊடகங்களுக்கு செய்தி கொடுக்க வலியுறுத்தி இருக்கிறேன். அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவேண்டும் என விண்ணப்பம் வரவில்லை. அப்படி விண்ணப்பம் வந்தால் முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். அதிமுக தலைவர்கள் மாறி மாறி பேட்டி அளிக்கின்றனர். இன்று ஒரு நிலை, நாளை ஒரு நிலை என பேசுகின்றனர். அவர்களுக்கு பதில் அளித்தால் நாம் கூறும் பதிலே வித்தியாசப்படும் என்பதால் அவர்கள் போகும் போக்குக்கே விட்டுவிடுகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு  சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், ரேணுகாதேவி, முல்லை, உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அறுபடை முருகன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Arapada Murugan Temples ,Minister ,Sekharbhabu ,Thandiyarpettai ,Arulmigu Muthukmarasamy Temple ,Chennai Park Kandakotam ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. Sekarpapu ,Amapai Murugan Temples ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி